தனது சத்சங்கத்தை கேட்போர் தூக்கம் வந்தால், டீ குடித்துவிட்டு வருமாறும், அரை போதையில் உள்ளவர்கள், முகத்தில் தண்ணீர் தெளித்துகொண்டு வந்து கேட்குமாறு சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகள், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டு, முன்னாள் சீடர்களுக்குக் கொலை மிரட்டல் என பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவை குஜராத் நீதிமன்றம், கர்நாடக நீதிமன்ற, வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று எத்தனை பேர் தேடினாலும், அவர் நிழல் இருக்கும் இடம் கூட இன்னும் இந்திய அரசு தரப்புக்குத் தெரியவில்லை. மேலும், இந்திய அரசு தேடும் நபராக அறிவித்திருந்தாலும், அவர் தலைமறைவாக இல்லை என்பது, தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்வதில் இருந்தே தெரிகிறது. ஒவ்வொரு முறை வீடியோ வெளியிடும்போதும், தன்னைப் பற்றி பேசப்படும் விஷயங்களுக்கு பதில் சொல்லும் வகையில் நித்யானந்தா உரையாற்றுகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல நித்யானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2010-ம் ஆண்டு தன்னை எவ்வித ஆதாரமின்றி பாலியல் வழக்கில் கர்நாடகா அரசு தன்னை கைது செய்ததாகவும், கைது செய்த பின்னரே சாட்சிகளை கூவி கூவி அழைத்ததாகவும் விமர்சனம் செய்தார். மேலும், தனது சத்சங்கத்தை கேட்போர் தூக்கம் வந்தால், டீ குடித்துவிட்டு வந்து கேட்குமாறும், அரை போதையில் உள்ளவர்கள், முகத்தில் தண்ணீர் தெளித்துகொண்டு வந்து சத்சங்கத்தை கேட்குமாறு தெரிவித்தார். 

இதனையடுத்து, கள்ள உறவிற்கு தனி விளக்கத்தையே கூறியுள்ள நித்தியானந்தா, ஒருவர் கொடுத்த கமிட்மென்டுக்கு நேர்மையாக இருந்தால் அது நல்ல உறவு எனவும், கொடுத்த கமிட்மென்டுக்கு யார் நேர்மையாக இல்லையோ அது கள்ள உறவு என்றும் அட்டகாசமாக விளக்கத்தை அளித்துள்ளார்.