தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
எஸ்.பி.ஐ. வங்கி சமர்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்
தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அந்த தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் விவரங்களை சமர்ப்பிக்காத பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் மாதம் வரை அவகாசம் வேண்டும் என கோரியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், மார்ச் 12ஆம் தேதி (நேற்று) மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், மார்ச் 15ஆம் தேதிக்குள் அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நேற்று மாலையே தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்தது. அதனை பெற்றுக் கொண்டதாக தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வெளியிடூம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி சமர்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
மேலும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்ற அவர், “மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.