பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் சிங்கின் ஆசிரமத்தில் அதிகாரிகள் 2-வது நாளா நேற்று சோதனையிட்டத்தில் 2 ரகசிய குகைகள், சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை என ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது, நடந்த வன்முறையில் 37 பேர் கொல்லப்பட்டனர், 350 பேர் காயமடைந்தனர். அந்த வன்முறையைத் தூண்டிவிட ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாக புகார் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவின் பேரில், தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.எஸ்.பவார் முன்னிலையில் அதிகாரிகள் சோதனையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 12 மணிநேரத்துக்கும் மேலாக வருவாய் துறை அதிகாரிகள், போலீசார், ஆசிரமத்தில் தீவிரசோதனையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக்கூடாது என்பதற்காத ஆசிரமத்தைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், அதிரடிப்படையினர் அப்பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டள்ளனர்.

ஏறக்குறைய 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த ஆசிரமத்தை ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

இது குறித்து மக்கள் தொடர்பு துறை துணை இயக்குநர் சதீஸ் மேஹ்ரா கூறுகையில், “ தேரா சச்சா ஆசிரமத்தில் அனுமதி பெறாமல் ஒரு பட்சாசு தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்துள்ளது. அதற்காக தடை செய்யப்பட்ட ஏராளமான வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக செயல்பட்ட இந்த பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்ட சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு எண் பெறப்படாத அதிநவீன சொகுசு கார், ஏராளமான செல்லாத ரூபாய்கள், பிளாஸ்டிக் கரன்சிகள், நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகள் , ஷூக்கள், ஆயிர்ககணக்கான ஆடைகள், தலைக்கு வைக்கும் தொப்பிகள், கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள்,ஏராளமான பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை பதிவு செய்ய 50 கேமராமேன்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில் முக்கியமாக, ஆசிரமத்தில் 2 ரகசிய குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று குகை, பெண்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்கிறது. மற்றொரு குகை அவசரநேரத்தில் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைக்காக அதிக திறன் கொண்ட பொக்லைன் எந்திரம், தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

800 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆசிரமத்தில் எம்.எஸ்.ஜி. ரிசார்ட் என்ற பெயரில் சொகுசு ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. அதில் ஈபில் கோபுரம், தாஜ்மஹால், டிஸ்னி வோர்ல்டு போன்றும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை, திரையரங்கு, விளையாட்டு அரங்கு ஆகியவை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.