Asianet News TamilAsianet News Tamil

கடும் பண தட்டுப்பாடு....!!! 50,000 திருமணங்கள் நிறுத்தம் - ரூ.2.5 லட்சம் எடுக்க முடியாமல் மக்கள் புலம்பல்

demonetisation currency-t7da6z
Author
First Published Dec 4, 2016, 3:13 PM IST


பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால், ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக, ஆந்திரா, தெலங்கானாவில் நேற்று நடக்க இருந்த 50 ஆயிரம் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திருமணத்துக்கு வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சத்தை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில், வங்கி அதிகாரிகளின்  கெடுபிடிகளால் பணம் கிடைக்காமல், பல பெற்றோர்கள் தங்கள் மகள், மகனின் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

கெடுபிடி

பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு வங்கியில் இருந்து பணம் எடுப்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்தன.

இதில் குறிப்பாக திருமணம் வைத்திருப்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.50 லட்சம் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மணமகள், மணமகன் அடையாள அட்டை, திருமணப் பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வங்கி அதிகாரிகளிடம் திருமண வீட்டார் அளிக்க வேண்டும் என பல விதிமுறைகளை விதித்தது.

சுபமுகூர்த்தம்

இந்நிலையில், தெலுங்கு பேசும் மக்களுக்கு திருமணம் நடத்த நேற்று மட்டுமே சுப முகூர்த்தமாகும். இந்த நாளில் திருமணம் நடத்த தவறினால், அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதிக்கு பின்தான் சுபமுகூர்த்தங்கள் வருகின்றன. இதன் காரணமாக ஐதராபாத்தில் மட்டுமே நேற்று 20 ஆயிரம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன. தெலங்கானாவில் 30 ஆயிரம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன.

தள்ளிவைப்பு

ஆனால், திருமணத்துக்கு வங்கியில் இருந்து பணம் எடுப்பதில் தொடர்ந்து கெடுபிடிகள் நீடிப்பதால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நேற்று நடக்க இருந்த 50 ஆயிரம் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

எடுக்கமுடியவில்லை..

இது குறித்து ஆந்திரா மாநிலம், மாதாப்பூரைச் சேர்ந்த வி சந்திரிகா என்பவர் கூறுகையில், “ வங்கி அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் நான் சமர்பித்த பின்பும், எனக்கு ரூ.2.5 லட்சம் கிடைக்கவில்லை. வங்கியில் பணம் இல்லை எனக்கூறி எனக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே கொடுத்தனர். இதனால், இன்று(நேற்று) நடக்க இருந்த எனது ஒரே மகளின் திருமணத்தையும் தள்ளி வைத்துவிட்டேன். எனது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்த பின்பும், என் தேவைக்கு எடுக்கமுடியவில்லை. கேட்டால் விதிமுறைகள் இருக்கிறது என்று வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

கண்துடைப்பு

பணப்பற்றாக்குறையில் திணறும் வங்கிகள், திருமணத்துக்காக பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு மட்டும் கேட்டால் பரவாயில்லை. பணத்தை யாருக்கு கொடுக்கப்போகிறோம் என்ற பட்டியல், அதற்கான  உறுதிமொழிப்பத்திரம், அவர்களுக்கு வங்கி கணக்கு இருக்கிறதா?, ஆன்-லைன் கணக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வாடிக்கையாளர்களை வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனர். ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தி விட்டது என்று கூறுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்று மக்கள் புலம்புகின்றனர்.

விதிமுறையை மீறமுடியாது

ஐதராபாத்தில் உள்ள ஆந்திரா வங்கியின் மேலாளர் எம்.என். சுதாகர் கூறுகையில், “ திருமணத்துக்காக மக்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அதேசமயம், ரிசர்வ்வங்கியின் உத்தரவுப்படி அனைத்து ஆவணங்களைப் பெறும் விசயத்தில் விதிமுறைகளை மீற முடியாது'' என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios