செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுளை மாற்ற ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மாற்ற முடியாமல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால், அவர்கள் கடும் வெறுப்புக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளனர்.

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதன்பின் ஜனவரி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜூன் 30 வரையிலும் குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அரசு கூறியது.

அலைக்கழிப்பு

ஆனால், மத்திய அரசு கூறியபடி,  ரிசர்வ் வங்கி கிளைகளில் பணத்தை கொடுத்து மாற்ற மக்களுக்கு அனுமதி மறுக்கிறது. அதேசமயம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட 5 கிளைகளில் கொடுத்து மாற்றச் செல்லும் போது ஏராளமான ஆவணங்களைக் கேட்டு, அதிகாரிகள்  அவர்களை அலைக்கழிப்பு செய்கின்றனர்.

பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்களை அதிகாரிகளிடம் பேச அனுமதிக்காமலும், அவர்களின் குறைகளை கேட்கவும்  மறுப்பதால் அவர்கள் பெரும் அதிருப்தியிலும், வேதனையிலும் உள்ளனர்.

எரிக்கச் சொல்கிறாரா?

இது குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ரித்து திவான் கூறுகையில், “ என்னிடம் வெளிநாடு பாஸ்போர்ட் இருக்கிறது. இந்தியக் குடிமகன் தான். ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்து செல்கிறேன். எங்களிடம் சில செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை மாற்றுவதற்கு சென்றால், காவலர்கள் ரிசர்வ் வங்கிக்கு உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். பிரதமர் மோடி என்ன எங்கள் பணத்தை எரித்து விடச் சொல்கிறாரா?. அதிகாரிகளின் தேவையில்லாத இந்த அலைக்கழிப்பு இந்த நாட்டுக்கு நாங்கள் வரக்கூடாது என்பதைக் காட்டுகிறதா? '' எனக் கோபமாகத் தெரிவித்தார்.

நிரூபிக்க முடியுமா?

மற்றொரு வெளிநாட்டு இந்தியர் தரம்வீர் கூறுகையில், “ இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்லும் என்னைப் போன்றவர்கள் கொஞ்சம் இந்திய ரூபாயை எப்போதும் கையில் வைத்திருப்போம். கமிஷன் கொடுத்து ரூபாயை மாற்ற தயாராக இருப்பதில்லை. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒருலட்சம் வரை வைத்திருப்போம்.  இந்த பணம் எல்லாம் அரசு கருப்பு பணம் அல்லது கள்ள நோட்டு என நிரூபிக்க முடியுமா பார்க்கலாம்?'' எனத் தெரிவித்தார்.

கோடிகள் இல்லை

டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் மாற்ற வந்திருந்த வெளிநாடு இந்தியர்கள் ஏராளமானவர்களை அலைக்கழிப்பு செய்ததால் அவர்கள் கொதித்துப்போய் போராட்டத்தில் இறங்கினர். தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இல்லை, சில ஆயிரங்கள் தான் இருக்கிறது என்ற கோஷமிட்டனர்.

வீசி எறிந்தனர்

மேலும், சில வெளிநாடு வாழ் இந்தியர்கல் ஆத்திரத்தில் தங்களிடம் இருந்த செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் வாசலில் வீசி எறிந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.