நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பின் 562 கோடி ரூபாய் பறிமுதல்… வருமான வரித்துறை அதிரடி…

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் பொது மக்களிடையே பணப் புழக்கம் குறைந்து போனது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் களில் பணம் எடுக்க முடியாமல் பொது மக்கள் திண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சேகர் ரெட்டி, ராம மோகன ராவின் மகன் விவேக் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏராளமான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனைகள் மற்றும் ஆய்வுகளில் 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 110 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் என்று கூறப்படுகிறது. 

இதே போன்று ஜனவரி ஒன்றாம் தேதி வரை கணக்கில் காட்டப்படாத மொத்த வருமானம் 4,663 கோடி ரூபாய் வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து  5062 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இதுவரை 1100 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 556 ஆய்வுகளும், 253 சோதனைகளும், 289 பறிமுதல்களும் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.