தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியுள்ள நிலையில் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீராத தலைவலியாக உள்ளது. கடந்த சில நாட்களில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு (AQI) 457 என மிக மோசமான பிரிவின் கீழ் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாட்டல் டெல்லிவாசிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசுபாடு நீடித்து வருகிறது.

5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள்

இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதால், 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தும்படி பள்ளிகளுக்கு டெல்லி அரசு திங்கள்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) 'கடுமையான' பிரிவில் நீடிப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை 5ம் வகுப்புகள் வரை ஆன்லைன் முறைக்கு மாறுமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நேரடி வகுப்புகள் நிறுத்தம்

இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, டெல்லியில் நிலவும் அதிக AQI அளவுகளைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும் ஆன்லைன் கற்றலை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு பள்ளித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6ம் வகுப்புகளுக்கு மேல் நேரடி வகுப்புகள்

குழப்பத்தைத் தவிர்க்க, இந்த மாற்றப்பட்ட ஏற்பாடு குறித்து பெற்றோருக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கலப்பின முறையில் (hybrid mode) நடைபெறும் என்று கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.