காற்று மாசு: டெல்லியில் நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
காற்று மாசுபாடு காரணமாக தலைநகர் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு வருகிற 10ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை ருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அம்மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகள் நவம்பர் 5 ஆம் தேதி வரை மூடப்படும் என்று டெல்லி அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், நகரின் மோசமான காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
“அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10ஆம் தேதி வரை மூடப்படும். 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூடத் தேவையில்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதற்கான விருப்பம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுகாலமாகவே மோசமாக உள்ளது. அண்டை மாநில விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு, வாகனங்களின் மிகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, இன்று காலையில் 460 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) தொடர்ந்து ஆறாவது நாளாக டெல்லி கடுமையாக மாசுபட்டுள்ளது. காற்று மாசுவால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திய கனடா: பியூஷ் கோயல்!
நுரையீரலை ஆழமாக தாக்கி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரோஸ்கோபிக் PM2.5 துகள்கள், கடந்த சில நாட்களில் டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் பல இடங்களில், டெல்லி அரசின் பாதுகாப்பான வரம்பான ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்பதை விட அதிகமாக ஏழு முதல் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பான வரம்பான ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் என்பதை விட 80 முதல் 100 மடங்கு அதிகமாகும்.
உலகளவில் தலைநகரங்களில் மிகவும் மோசமான காற்றின் தரத்தை டெல்லி கொண்டுள்ளது. சிகாகோ பல்கலைக்கழக அறிக்கையின்படி, டெல்லி காற்று மாசுபாடு மக்களின் ஆயுட்காலத்தில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளை குறைக்கிறது.