தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திய கனடா: பியூஷ் கோயல்!
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கனடா நிறுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
இந்தியா கனடாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையை கடந்த செப்டம்பர் மாதம் கனடா இடை நிறுத்தியது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தியா-கனடா பேச்சுவார்த்தைகளில் ஆரம்பகட்ட முன்னேற்றத்திலேயே அதனை இடைநிறுத்தம் செய்வதாக கனடா தரப்பு தெரிவித்தது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை சுமார் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. சரக்குகள், சேவைகள், பிறப்பிட விதிகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள் மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் கனடா அதிகாரிகள் கடந்த மே மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஒப்பந்தத்தை நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்தியா-கனடா இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு இடையே, தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை கனடா இடைநிறுத்தியது.
இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனவும், இந்த இடைநிறுத்த காலம் என்பது இரு நாடுகளும் முன்னேற்றத்தைக் கணக்கிட உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்திய கனடா, பின்னர் அதனை நிறுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசியல்வாதிகளிடையே சில தவறான கருத்துகள் உள்ளன. அவை ஆதாரமற்றவை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சந்தை பெரியது எனவும், அதிக வாய்ப்புகளை வழங்குவதால் இந்த நடவடிக்கை கனடாவை மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
2022-23ல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 8.16 பில்லியன் டாலராக இருந்தது. இது அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகமான 128.7 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் குறைவானது. இருப்பினும், இந்தியா தனது பொட்டாஷ் தேவைகளுக்காக கிட்டத்தட்ட முழுவதுமாக இறக்குமதியைச் சார்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான கனடாவிலிருந்து அதிக அளவிலான பொட்டாஷை இந்தியா வாங்குகிறது.
கலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.