மாநிலங்களவையில் நிறைவேறும் டெல்லி அவசரச் சட்டம்: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆதரவு!

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளதால், டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்புள்ளது

Delhi ordinance bill to clear in rajyasabha as ysr congress came to support bjp

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை மத்திய அரசு தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது.

டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. விவாதம், நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களின் பட்டியலில் டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவும் இடம்பெற்றுள்ளது.

பாஜகவின் தனி பெரும்பான்மை காரணமாக மக்களவையில் இந்த மசோதா எளிதில் நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் சிக்கல் எழும் நிலை உள்ளது. இந்த மசோதாவை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில், டெல்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம், டெல்லி அவசர சட்ட மசோதா ஆகிய இரண்டு விஷயங்களிலும் நாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜய்சாய் ரெட்டி தெரிவித்துள்ளார். அக்கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

மாநிலங்களவையில் தற்போது மொத்தம் 238 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். ஐந்து நியமன எம்.பி.க்கள் மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என பாஜக உறுதியாக நம்பிகிறது. இதன் மூலம், 112 வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக கிடைக்க வாய்ப்புள்ளது.

டெல்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு 105 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றும் பெரும்பான்மைக்கு பாஜகவுக்கு இன்னும் 8 வாக்குகள் தேவை. இந்த சூழலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளது. அக்கட்சியின் 9 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் மாநிலங்களவையிலும் அந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும். அத்துடன், மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திலும் பாஜகவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.பி.க்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும்.

எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சாடல்!

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடம் இருந்தது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்ததையடுத்து, அந்த அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என டெல்லி அரசு கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்த ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். ஆனால், டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.

டெல்லி அவசரச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக கூறி அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios