அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக முறையீடு: சஞ்சய் சிங் மனுவை விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம்!
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள கலால் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கு சரியாக வழங்கப்படவில்லை என்ற அவரது வழக்கறிஞரின் முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
அதேசமயம், சஞ்சய் சிங்கின் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இன்று பிற்பகல் 2 மணிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மகாதேவ் சூதாட்ட செயலி: தாவூத் இப்ராஹீம், சர்வதேச தொடர்புகள் - அதிர வைக்கும் தகவல்கள்!
இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். சுமார் 10 மணி நேர விசாரணைக்கு பின்னர், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.