Asianet News TamilAsianet News Tamil

மகாதேவ் சூதாட்ட செயலி: தாவூத் இப்ராஹீம், சர்வதேச தொடர்புகள் - அதிர வைக்கும் தகவல்கள்!

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி முறைகேடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Mahadev App Scam links with the infamous D company Dawood Ibrahim why it so important smp
Author
First Published Oct 13, 2023, 1:01 PM IST

 சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருகிறது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி உப்பாலுடன் துபாய் சென்று, அங்கு கடை நடத்திக்கொண்டே சூதாட்ட செயலியை உருவாக்கி அங்கேயே பதிவு செய்து, இந்தியாவில் அதனை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் ரூ.200 கோடி செலவு செய்து சவுரப் சந்திரகர் தனது திருமணத்தை நடத்தியுள்ளார். இதில், பாலிவுட் பிரபலங்கள் 17 பேர் கலந்து கொண்டனர். தனி விமானத்தில் அவர்கள் அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு, ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில், துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில், பாலிவுட் நடிகர்கள் சிலருக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாலிவுட் பக்கம் அமலாக்கத்துறை தனது பார்வையை திருப்பியுள்ளது.

மேலும், பெரிய அரசியல்வாதிகள் முதல் உயர் அதிகாரிகள், உள்ளூர் போலீஸ்காரர்கள் வரை பலருக்கும் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுவதால், அமலாக்கத்துறை விசாரணை வலை விரிவடையும் போது, மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளது.

அத்துடன், தலைமறைவாக இருக்கும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹீமின் ‘டி’ கம்பெனியின் தொடர்புகள், ஹவாலா ஆப்பரேட்டர்கள், போலி நிறுவனங்கள், மத்திய கிழக்கு, தாய்லாந்து தொடர்புகள் என சர்வதேச நெட்வொர்க் வரை இந்த முறைகேடு நீள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேட்டை இந்தியாவின் புதிய சிட் பண்ட் முறைகேடு என்று கூறுகிறார்கள். இந்தியாவில் பொதுவாக 'சிட் ஃபண்ட்' ஊழல் என்று அழைக்கப்படும் பொன்சி திட்ட ஊழல் விசாரணையின் என்ன நடந்ததோ அதேபோன்று இருப்பதால், இதனை சிட் பண்ட் முறைகேட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.க்கள் இவங்கதான்: அடேங்கப்பா இம்புட்டு சொத்தா?

மஹாதேவ் செயலி மற்றும் மொன்சி திட்டங்களுக்கு இடையே ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. அது, மக்களின் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றிய சிட் ஃபண்ட் மோசடி போலல்லாமல், இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த மஹாதேவ் சூதாட்ட செயலி என்று அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

டி-கம்பெனியுடன் தொடர்புகள்


சஹாரா, சாரதா, ரோஸ் பள்ளத்தாக்கு போன்ற பல பொன்சி திட்டங்கள், டெபாசிட் செய்தவர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்துகொண்டனர். இருப்பினும், 'தேசிய பாதுகாப்பு' அதில் சம்பந்தப்படவில்லை. பெரிய வருமானம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி கடன் வலையில் சிக்க வைப்பது பழைய முறை.

ஆனால், மகாதேவ் சூதாட்ட செயலி மீதான விசாரணையில், நாட்டிற்கு எதிரான நிதி சதி உள்ளிட்ட முக்கியமான தரவுகள், ஆதாரங்கள் புலனாய்வாய்வு அதிகாரிகள் கைகளில் சிக்குகின்றன. இந்த ஆன்லைன் சூதாட்ட செயலி விசாரணையின் போது, மக்களை ஏமாற்றுவது மட்டுமின்றி, துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணமோசடி செய்வதும், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு, ஹவாலா ஆபரேட்டர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் தாய்லாந்தில் தங்கள் வணிகத்தை பரப்புவது என மிகப்பெரிய மோசடி தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையின் போது நிழலுலக தாதா தாவூத் இப்ராஹீமின் ‘டி’ கம்பெனியுடன், இவர்களது தொடர்புகள் பற்றிய உளவுத்துறை மூலம் அமலாக்கத்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனை அமலாக்கத்துறை தீவிரமாக சரிபார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலிகளின் கூட்டமைப்பு மகாதேவ் ஆஃப்


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மகாதேவ் செயலி, சட்டவிரோதமாக நாடு முழுவதும் இயங்கும் குறைந்தது 10 சூதாட்ட செயலிகளை கைப்பற்றியது. மஹாதேவ் சூதாட்ட சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தவைகளில், லோட்டஸ் 365, ரெட்டிஅன்னா மற்றும் பல அடங்கும்.

சீனா மற்றும் பிற பிரச்சனைக்குரிய வெளிநாட்டு இடங்களில் இருந்து செயல்படும் சுமார் 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகளை உள்துறை அமைச்சகம், கடந்த பிப்ரவரியில் கட்டுப்படுத்தியது. லோட்டஸ் 365 போன்றவை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. அது, இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த செயலிகளுக்கான விளம்பரங்களை இன்றும் சமூக வலைதளங்களில் காணலாம். அதில், ஒரு வாட்ஸ் அப் எண்ணும், விளையாட்டாளர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களுக்கான பதிவு இணைப்பும் இருக்கும். இவை கேசினோக்கள் போன்று செயல்படுகின்றன. ஆனால், கேசினோக்களில் கட்டுப்படுத்தப்பட்டவை. ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சட்ட விரோதமானவை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, “வாட்ஸ் அப் எண்ணை க்ளிக் செய்ததும், பந்தயம் கட்ட ஆர்வமுள்ள நபரை Paytm அல்லது G Pay பக்கத்துக்கு அழைத்து செல்லும். அவர்கள் பணம் செலுத்தியதும், செயலியை  கட்டுப்படுத்தும் குழு உறுப்பினர்கள், தங்களது கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு, ஹவாலா அக்கவுண்ட்டுகள் அல்லது ஷெல் அக்கவுண்டுகளுக்கு பணத்தை அனுப்பி விடுவர். பின்னர், வேறு ஒரு செயல்முறை மூலம், பணம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஹவாலா ஆபரேட்டர் சுமார் 200-300 வாடிக்கையாளர்களைக் கையாளுகிறார்.” என்று மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, முக்கிய கட்சிகளின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகளின் தொடர்புகள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். “சில முக்கியமான விவரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதை இப்போது வெளியிட முடியாது. இந்த மாதம் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம்.” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios