இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.க்கள் இவங்கதான்: அடேங்கப்பா இம்புட்டு சொத்தா?
இந்தியாவின் பணக்கார எம்,எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தென் மாநிலங்களவை சேர்ந்தவர்கள் என அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 பணக்கார எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
முதல் 100 எம்எல்ஏக்களில் 52 பேர் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதில், கர்நாடகாவில் அதிகபட்சமாக 34 பேர் உள்ளனர். அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 10 பேர், தமிழகத்தில் 5 பேர், தெலங்கானாவில் 3 பேர் உள்ளனர்.
மேலோட்டமாகப் பார்த்தால், தெற்கில் இருந்து அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் அரசியலுக்கு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பல காரணங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்கள் மற்றும் மாநிலத் தலைநகரங்களைச் சுற்றியுள்ள ரியல் எஸ்டேட் தொழிலும், அதன் விலைகளில் உள்ள ஏற்றமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது தவிர, சொத்துக்களை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மையும் ஒரு பங்கு வகிக்கிறது. தெற்கில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பன்முகப்படுத்தப்பட்ட தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். அவை பெரும்பாலும் சட்டபூர்வமானவை என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கூறுகிறது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜஸ்கிரத் சிங் கூறுகையில், “தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் போலல்லாமல், அவர்களது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் உண்மையை மறைக்காமல் கூறுகின்றனர். அவர்கள் அதிக வெள்ளைப் பணம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை.” என்கிறார்.
“வடக்கில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை விட தென் மாநிலங்களில் ஏன் அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதை சரியாகச் சொல்வது கடினம் என்றாலும், தென்னிந்தியாவில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க தொழில்கள் மூலம் அதிக வெள்ளைப் பணத்தை வைத்திப்பதாலும், பலதரப்பட்ட முதலீடுகளாலும், இயல்பாகவே வட மாநில எம்.எல்.ஏ.க்களை விட பணக்காரர்களாக உள்ளனர்.” எனவும் ஜஸ்கிரத் சிங் கூறியுள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் தெலங்கானா மாநில ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ரெட்டி கூறுகையில், “கோடீஸ்வரர்களான பெரும்பாலான தென் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளனர். நகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களின் விலை ஏற்றம் அவர்களின் முதலீட்டை உயர்த்தியுள்ளது.” என்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த முதல் மூன்று பணக்கார எம்எல்ஏக்களின் அசையா சொத்துகள் அல்லது ரியல் எஸ்டேட்டில் ரூ.2,198 கோடி முதலீடு செய்திருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் மூவரும் சேர்ந்து தங்களிடம் ரூ.3,836 கோடி சொத்து மதிப்புள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளனர்.
மலிவு விலையில் ஜியோ லான்ச் செய்த அட்டகாசமான போன்!
பெங்களூருவில் ஒரு சதுர அடி நிலம் ரூ.2,000-ரூ.3,000 என்ற விலையில் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் வாங்கியிருந்தார். அதன் விலை தற்போது ஒரு சதுர அடிக்கு ரூ.35,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என இதுகுறித்த விவரமறிந்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த வட - தென் மாநிலங்களின் ஏற்றத்தாழ்வுக்கு தென் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
“வடமாநில எம்எல்ஏக்கள் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யும் சொத்து மதிப்புகள், முந்தைய தரவுகளுடன் ஒப்பிடும்போது சுமார் 50% முதல் 60% வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கிறோம். தேர்தல் சுழற்சியில் ஐந்தாண்டு கால தாமதம் உள்ளது. இது தென் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வட மாநில எம்.எல்.ஏ.க்களை விட அதிகமாக இருப்பது போன்று காட்டலாம்.” என ஜஸ்கிரத் சிங் தெரிவித்துள்ளார்.