டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியதில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு டெல்லியின் மோடி நகரில் உள்ள சுதர்சன் பூங்கா என்ற இடத்தில் 3 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் மின் விசிறிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் தொழிற்சாலை உள்ளே சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 
இதனால், 3 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதியும் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு 5 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைக்கு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாது, விபத்து நேரிட்ட கட்டிடம் அருகே நின்றவர்களும் படுகாயமடைந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.