திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது என்றும் என்னுடைய கார் கண்ணாடியும் நொறுங்கியது என்றும் கார் வெடிவிபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே திங்கள்கிழமை மாலை நடந்த குண்டுவெடிப்பின் சோகத்தை நேரில் பார்த்த ஒருவர் விவரித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் ANI இடம் தெரிவித்தார். ஆனால், இப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேஎலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.



டெல்லி கார் வெடிவிபத்து சம்பவத்தை நேரில் பார்த்த பேருந்து ஓட்டுநர் ராஜீவ் சவுத்ரி, இந்த சம்பவத்தை விவரிக்கையில், "சாலையில் அனைத்து வாகனங்களும் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. திடீரென, ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது, என் வாகனத்தின் கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கின, நான் காற்றில் தூக்கி வீசப்பட்டேன்... தீப்பிடித்து எரிந்த வாகனத்தில் யார் இருந்தார்கள் என்று என்னால் பார்க்க முடியவில்லை... என் வாகனத்திற்கு அருகில், ஒரு சடலத்தைப் பார்த்தேன்... காவல்துறை உடனடியாக வந்துவிட்டது," என்றார்.



இச்சம்பவம் குறித்து நேரில் பார்த்த யாசின் ஹூசைன் என்று மற்றொருவர் கூறுகையில் வெடிவிபத்தின் தாக்கத்தில் மயங்கி விழுந்ததாகவும், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பியதாகவும் கூறினார். "நான் காஷ்மீரி கேட்டில் இருந்து வந்து கொண்டிருந்தேன், அப்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, நான் தரையில் விழுந்தேன், 5 நிமிடங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தேன்... அங்கே 4-5 கார்கள் வெடித்துச் சிதறின," என்று அவர் ANI இடம் கூறினார்.



சிவப்பு விளக்குக்குப் பிறகு சாலையைக் கடந்து கொண்டிருந்த நொய்டாவைச் சேர்ந்த பூபிந்தர் சிங், நூலிழையில் உயிர் தப்பினார். "நான் என் வாகனத்தில் இருந்தேன், ரெட் சிக்னலுக்கு பிறகு சாலையைக் கடந்து கொண்டிருந்தேன், திடீரென்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது... எனக்குப் பின்னால் இருந்த காரில் தான் அந்த வெடிப்பு நிகழ்ந்தது... நான் காரை விட்டுவிட்டு ஓடிவிட்டேன். கடவுள் அருளால் நான் தப்பித்தேன்... எத்தனை பேர் இறந்தார்கள் என்று எனக்குத் தெரியாது," என்று சிங் அழுதுகொண்டே கூறினார். 

டெல்லியில் கேட்கும் மரண ஓலம்..! நிமிஷத்துக்கு நிமிஷம் குவியும் உடல்கள்..! நாடு முழுவதிலும் உஷார் நிலை

தலைநகரில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ANI இடம் தெரிவித்தார். டெல்லி காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர். "தற்போதைக்கு, நான் உங்களிடம் எதுவும் சொல்ல முடியாது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது." 

சம்பவ இடத்திற்கு வந்த சிஆர்பிஎஃப் டிஐஜி, இப்போது எதுவும் சொல்வது சரியாக இருக்காது என்றார். "நான் இப்போதுதான் சம்பவ இடத்திற்குச் செல்கிறேன்...," என்றார். சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே ஒரு காரில் குண்டுவெடிப்பு நடந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக துணை தலைமை தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக் கூறினார். "நாங்கள் உடனடியாக விரைந்து, ஏழு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். இரவு 7:29 மணிக்கு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் உயிரிழப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. எங்கள் குழுக்கள் அனைத்தும் சம்பவ இடத்தில் உள்ளன," என்றார்.

இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. விசாரணையில் இறங்கிய என்ஐஏ.. தீவிரவாத தாக்குதலா?