டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பணம் பெறும் திட்டத்தை செயல்படுத்த பெட்ரோல் டீலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் அங்கெல்லாம் நீண்ட வரிசை காணப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்கும்வகையில், நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் பணம் வினியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் ‘பாயின்ட் ஆப் சேல்ஸ்’ கருவியை வைத்திருக்கும் குறிப்பிட்ட 2,500 பெட்ரோல் நிலையங்களில் இத்திட்டம் நேற்று அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அக்கருவியில் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பதால், நாள்தோறும் 50 பேருக்கு மட்டுமே இப்படி பணம் வழங்க முடியும்.
இதுபோல், எச்டிஎப்சி, சிட்டிபேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளுடன் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் மேற்கண்ட வங்கிகளின் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி வைத்துள்ள 20 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களிலும் பணம் பெறும் வசதி, இன்னும் 3 நாள்களில் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு பெட்ரோல் டீலர்கள் சங்கம் எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் டீசர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், பணம் வினியோகிக்க நாங்கள் வங்கிகள் அல்ல. பெட்ரோல் வினியோகிப்பது மட்டுமே எங்கள் வேலை. அரசு உத்தரவுப்படி, பழைய ரூபாய் நோட்டுகளை நாங்கள் வாங்கி வருகிறோம். அத்துடன், பணம் வழங்குவதையும் செய்வது கடினம். அதை கட்டாயமாக செயல்படுத்த அரசு விரும்பினால், பெட்ரோல் நிலையங்களில் அதற்கென இடம் ஒதுக்கி தருகிறோம். வங்கி அதிகாரிகளே வந்து பணம் வழங்கட்டும் என கூறுகின்றனர்.
இதற்கிடையே, நேற்று மாலை நிலவரப்படி, நாடு முழுவதும் 686 பெட்ரோல் நிலையங்களில், டெபிட் கார்டு மூலம் பணம் வழங்கும் வசதி அமலுக்கு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இந்த திட்டம் அமல்படுத்தவில்லை. பத்திரிகைகளில் செய்தியை பார்த்து விட்டு, இன்று காலை முதலே டெபிட் கார்டுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் மக்கள், எந்த பெட்ரோல் நிலையத்திலும் பணம் வழங்கப்படாததால், ஏமாற்றத்துடன் மீண்டும் ஏ.டி.எம்.களுக்கே சென்றனர்.
