ஜனவரி 13 வரை டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படும்…பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவிப்பு

ஜனவரி 9-ம் தேதி முதல் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் பரிவர்த்தனைக்கு 0.25 முதல் 1 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் பஞ்சாப் தேசிய வங்கிகள் அறிவித்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்கப்பட மாட்டாது என அதிரடியாக அறிவித்தனர். வங்கிகளின் இந்த நடவடிக்கையால் தங்களுக்கு கூடுதலாக செலவு ஏற்படும் என்றும் இந்த கூடுதல் இழப்பை தங்களால் ஏற்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பெட்ரோலிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது இப்பிரச்சனை குறித்து விவாதித்து முடிவெடுப்பதாக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பெட்ரோலிய நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது என்ற முடிவு ஜனவரி 13-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய முகவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.