கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு தடைக்குப்பின் ஊக்குவிக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டிஜிட்டல் பரிமாற்றம் வெறும் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்ற குழுவிடம் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.

ரூபாய் நோட்டு தடை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவிடம் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.  அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளையும், ஊக்குவிப்பு திட்டங்களையும் அரசு அறிவித்தது.

இதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்படி, நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றம் செய்பவர்கள் எண்ணிக்கை 22.40 கோடி மக்கள் இருந்த நிலையில், 2017ம் ஆண்டு மே மாதத்தில் 23 சதவீதம் உயர்ந்து,  27.50 கோடியாக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக யு.பி.ஐ. செயலியை பயன்படுத்துவோர் மட்டும் 10 லட்சம் பேர் அதிகரித்து, கடந்த மே மாதம் வரை 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

வங்கிகளின் இணையதளம் மூலம் செய்யப்படும் ஐ.எம்.பி.எஸ். பணப்பரிமாற்றம் 12 லட்சத்தில் இருந்து 22 லட்சமாக உயர்ந்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட்கார்டுகள் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் 68 லட்சமாக இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 73 லட்சமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ரூபாய் நோட்டு தடைக்குப்பின் மத்தியஅரசு டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க முயற்சித்தபோதிலும், தொடர்ந்து மக்கள் ரொக்கப்பண பரிமாற்றத்தை நோக்கியே மீண்டும் நகர்ந்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.