நடிகர் ஷாரூக்கானை சந்திப்பதற்காக குஜராத்தில் ரயில் நிலையத்தில் பெரும்கூட்டம் கூடியது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்தி திரைப்படம்

இந்தி நடிகர் ஷாரூக்கான் (51) ‘ராயீஸ்’ என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்தப் படம் கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் அதில் நடித்துள்ள பிரபல நடிகர் ஷாரூக்கான் ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

10 நிமிடங்கள்

இந்நிலையில் அவர் வந்த ரயிலானது, குஜராத் மாநிலம் வடோதரா ரயில நிலையத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்பட்டது.

ஷாரூக்கான் ரயிலில் வருகிறார் என்ற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். இதனால், கடும் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அத்துடன் ஷாரூக்கானின் ரசிகர்கள் ரயில் ஜன்னல்களில் தொங்கிக்கொண்டு அடாவடியில் ஈடுபட்டனர். அவர்களை கலைப்பதற்காக ரயில்வே போலீசார் தடியடி நடத்தினர்.

மூச்சுத் திணறல்

10 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் கிளம்பியபோது, ரயிலுடன் ஷாரூக்கானின் ரசிகர்கள் ஓடத் தொடங்கினார்கள். அப்போது நெரிசல் ஏற்பட்டதில் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.