மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், இந்த பிரச்சனை சில வாரங்களில் சரியாகிவிடும் என்று கூறினாலும், பொருளாதார ஆய்வுப்படி பணத்தட்டுப்பாடு பல மாதங்களுக்கு நீடிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 1,571 கோடி (48 சதவீதம்). 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 633 கோடி (39 சதவீதம்). இது அக்டோபர் மாத இறுதியில் 5.6 சதவீதம் அதிகரித்தது.
இம்மாதம் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 1,658 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 668 கோடி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் கோடி. ஒரே இரவில் இவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் குறுகிய கால பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
1,000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த மைசூர் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் தான், இப்போது 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. அங்கு ஒரு மாதத்தில் 2 ஷிப்டுகளில் 133 கோடி நோட்டுகள் தான் அச்சடிக்க முடியும். 3 ஷிப்டுகள் பணியாற்றினாலும் அதிகபட்சமாக 200 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்க முடியும்.
எனவே 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும. குறிப்பாக 2வது வாரம் வரை இந்த பணி இழுத்து கொண்டே போகும்.
அதேபோல நாசிக்கில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. அதன் உற்பத்தி திறன் மாதம் 100 கோடி நோட்டுகள் மட்டுமே. டிசம்பர் 2வது வாரத்துக்கு பின் மைசூர் அச்சகமும் இணைந்து 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தாலும் புழக்கத்தில் உள்ள 1,658 கோடி ரூ.500 நோட்டுகளை அச்சடிக்க அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆகும்.
எனவே, இந்தியா முழுவதும் பணத்தட்டுப்பாடு பல மாதங்களுக்கு நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியும் நிலவும். அதன்பின்னரே இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வு ஏற்படும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பை கொண்டு வந்தாலும், பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் ஏற்படுவதை தடுக்க முடியாது என அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
