ஒரு லட்சம் ரூபாய்னா அது எப்பவுமே மதிப்பு மாறாது... ஆனால், இப்போது, ஒரு லட்சம் ரூபாய்னா , ரூ. 60 ஆயிரம் தான் என்று கூறி புதிய பிஸ்னஸ் கிளம்பியுள்ளது.

அதாங்க, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை ஒரு லட்சத்துக்கு கொடுத்தால் 40 சதவீதம் கழித்துக்கொண்டு, ரூ. 60 ஆயிரம் தரப்படும் பிஸ்னஸ் உத்தரப்பிரதேசத்தில் படுஜோராக ஓடுகிறது.

நாட்டில் கருப்புபணம், கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.1000, ரூ500 நோட்டுக்களை தடை செய்தார். அதன்பின் மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை புகுத்தி வருவதால், கருப்பு பணம் வைத்திருப்போர் பணத்தை வெள்ளையாக மாற்றுவதில் பல சிக்கல் எழுந்து வருகின்றன. இதனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத், லக்னோ, காஜியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் கருப்பு பண வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.

அதாவது, ஒருவர் கையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களாக ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தால், அதைக் கொடுத்து, ரூ. 60 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், ரொக்கப்பணமாக வாங்காமல், அதே ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தோடு பல பண முதலைகளை இடைத்தரகர்கள் அனுகி பணம் பெற்று கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷன் பெற்று மாற்றப்படுகிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் வசதிபடைத்த பணக்காரர்களை தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள்.