இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி.ராஜாவுக்கு, முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இடதுசாரி இயக்கங்களில் முக்கிய கட்சியாக இருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருப்பவர் சுதாகர் ரெட்டி.  இவர் கடந்த இரண்டு முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென கடந்த ஓராண்டாக சுதாகர் ரெட்டி வலியுறுத்தி வருகிறார்.  

இந்நிலையில், பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தனக்கு சளித் தொந்தரவு அதிகம் இருப்பதால் ஓய்வு கொடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டுக்கொண்டதோடு பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு டி. ராஜாவை பரிந்துரை செய்கிறேன் என கூறியிருக்கிறார். டி. ராஜா கடந்த 20 வருடங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் பணியாற்றி வருகிறார். டி. ராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

 

இந்நிலையில், டெல்லியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், நீண்ட நேரம் ஆலோசனைக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக டி. ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.