கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்; கொரோனாவை உறுதி செய்ய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என அனைத்து மாநில அரசுளுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. 

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்தி வைத்தது. இதனையடுத்து, அடுத்த இரு தினங்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம். மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் என கூறியிருந்தது. 

இந்நிலையில், 2 நாட்கள் ரேப்பிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்த நிலையில் ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது. அதில்,கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம், கொரோனாவை உறுதி செய்ய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என்று கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.