மும்பை KEM மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் இறந்துள்ளனர், இருவருக்கும் ஏற்கனவே கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருந்துள்ளன. வாய்வழிப் புற்றுநோய் மற்றும் நெஃப்ரோடிக் நோய்க்குறி ஆகியவையே இறப்புகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா: மும்பையின் KEM மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர். இறந்துள்ளனர், இருவருக்கும் ஏற்கனவே கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு கோமார்பிடிட்டிகள் (ஒரு நபருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ நிலைமைகள் ஒரே நேரத்தில் இருப்பது) தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு வாய்வழிப் புற்றுநோயும், மற்றொருவருக்கு ஹைப்போகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோய்க்குறியும் இருந்துள்ளது. இரண்டு இறப்புகளுக்கும் கொரோனா காரணம் அல்ல, அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய்களே காரணம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவிட்-19 பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்த பிறகு மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் இறந்தனர். நோயாளிகளில் ஒருவர் 14 வயது சிறுமி ஆவார். அவருக்கு சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுத்த நெஃப்ரோடிக் நோய்க்குறி இருந்துள்ளது. மற்றொரு நோயாளி புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த 54 வயது பெண். இந்த இறப்புகள் நேரடியாக கோவிட்-19 காரணமாக ஏற்படவில்லை என்று பிரிஹன்மும்பை மாநகராட்சி (BMC) தெளிவுபடுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, வெளிநாடுகளில் கோவிட்-19 அதிகரிப்பை சுகாதார அமைச்சகம் மறுஆய்வு செய்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 257 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அனைத்தும் 'லேசானவை'.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த பாதிப்புகள் பெரும்பாலும் லேசானவை மற்றும் அசாதாரண அல்லது இறப்புடன் தொடர்புடையவை அல்ல என்று கூறப்படுகிறது. சமீபத்திய ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), அவசர மருத்துவ நிவாரண (EMR) பிரிவு, பேரிடர் மேலாண்மை பிரிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளின் நிபுணர்களுடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை கூட்டியதாகவும், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

மே 19, 2025 நிலவரப்படி, இந்தியாவில் 257 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டின் பெரிய மக்கள் தொகையைக் கருத்தில் கொள்ளும் போது இது மிகக் குறைந்த எண்ணிக்கையே. இந்த பாதிப்புகள் அனைத்தும் லேசானவை, மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) மற்றும் ICMR மூலம் கோவிட்-19 உட்பட சுவாச வைரஸ் நோய்களைக் கண்காணிப்பதற்கான வலுவான அமைப்பும் நாட்டில் உள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதிலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்வதிலும் மத்திய சுகாதார அமைச்சகம் விழிப்புடனும், முன்கூட்டியே செயல்படுவதிலும் முனைப்பாக உள்ளது.

ஜனவரி முதல் மே மாதம் வரை மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கோவிட்-19 தொடர்பான இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. 52 நோயாளிகள் லேசான அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஜனவரி முதல் மொத்தம் 6,066 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 தொற்று நோய்க்கு சாதகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 101 மும்பையைச் சேர்ந்தவை. மீதமுள்ளவை புனே, தானே மற்றும் கோலாப்பூரை சேர்ந்தவை ஆகும்.