உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து சோதனை கட்டங்களைத் தாண்டிய அந்த மருந்து, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
கோவேக்ஸின் தடுப்பூசி ஹரியானா, டெல்லி ஆகிய மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டன. பின்னர் தமிழகம், கர்நாடகம், பீஹார், ஒடிஷா, ஆந்திரா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் காட்டங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் கட்டமாக நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேருக்கு இந்த மருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. ஊசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள்.


முதல் கட்டமாக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அந்த நபர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் கட்டமாக 18- 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இந்தப் பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். முதல் கட்ட தடுப்பூசி பரிசோதனை பணிகள் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் கட்டமாக 12- 65 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளன.


இந்தப் பணிகள் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்திலிருந்து தமிழகத்திலிருந்து 150 பேர் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் சுகாதரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனைகள் நடைபெற உள்ளன. மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக மருந்து நிறைவு செய்யும்பட்சத்தில், அதன்பின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.