டாக்டர்கள், மருந்து சீட்டுகளில் எழுதியுள்ளதை எத்தனை முறை பார்த்தாலும் அது நமக்கு விளங்குவதில்லை. மருந்து சீட்டுகளில் டாக்டர்கள் எழுதுவதை நாம் புரிந்துகொள்வது என்பதைவிட, மருந்து கடைகளில் பணிபுரிபவர்கள் சில சமயம் குழம்புவதும் உண்டு. மருந்து சீட்டில் இருப்பதை தவறாக புரிந்து கொண்டு, தவறான மருந்து கொடுக்கப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரில், நோயாளி ஒருவருக்கு டாக்டர், சீட்டில் மருந்து எழுதி கொடுத்துள்ளார். இதனை மெடிக்கல் ஷாப் கொண்டு சென்றுள்ளார் ஒருவர். அப்போது டாக்டரின் கையெழுத்தை தவறாக புரிந்து கொண்ட மெடிக்கல் ஷாப் பணியாளர், தவறான மருந்தைக் கொடுத்துள்ளார். இந்த மருந்தை அருந்திய நோயாளி, கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதேபோல, உன்னாவோ நகரை சுற்றியுள்ள இரண்டு டாக்டர்கள் எழுதிய கையெழுத்து புரியாமல் மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் ஜெய்ஷ்வால், பி.கே.கோயல், ஆஷிஸ் சக்ஸேனா ஆகியோருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் அபராதம் விதித்தது. 

மேலும், மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் மருந்து சீட்டில் எழுத உத்தரவிடும்படி உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டாக்டர்கள், கம்ப்யூட்டரில் டைப் செய்து மருந்து சீட்டு வழங்கினால் என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.