திருப்பதி தேவஸ்தான விடுதியில் ஓய்வுபெற்ற காவலர் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் திருப்பதிலேயே தங்கி ஏழுமலையானை தரிசிக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக திருமலை தேவஸ்தான் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதற்காக கீழ் திருப்பதி மற்றும் மேல் திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்காக குறைவான விலையில் பல விடுதிகள் உள்ளன.
மேல் திருப்பதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவர்த்தன், பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ், சப்தகிரி என ஏராளமான விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் மொத்தம் 6000 அறைகள் உள்ளன. ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.500, ரூ.600, ரூ.750, ரூ.1000, ரூ.1500. ரூ.2000 ஆகிய கட்டணங்களில் தங்கும் அறைகள் கிடைக்கின்றன. கட்டணத்திற்கு ஏற்ப அறைகளில் இருக்கும் வசதிகள் மாறுபடும். இந்த விடுதிகளில் தங்கி சுவாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதியில் ஓய்வுபெற்ற ஆந்திர மாநில காவலர் மனைவி உடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநிவாசலு என்ற ஓய்வுபெற்ற தனது குடும்பத்துடன் தேவஸ்தான அறையில் தங்கி இருந்த நிலையில், அவரின் மகளும், மகனும் ஷாப்பிங் சென்றுள்ளனர். அப்போது ஸ்ரீனிவாசலு அவரின் மனைவியும் அறையில் இருந்த மின்விசிறியில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தம்பதி உயிரை மாய்த்துக் கொண்டதற்கு என்ன காரணம் என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த சம்பவம் திருப்பதி மலையில் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
