கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் அதிரடியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 7200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்தியாவில் கொரோனா வைரஸால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நோய் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றனர். இதனிடையே, ரயில் நிலையங்களில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

அதேபோல், ரயில் நிலையங்களில் பயணிகளை மட்டுமன்றி அவா்களை வழியனுப்பவரும் உறவினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை பயணச்சீட்டு கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.50-ஆக தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தேவையில்லாத பயணத்தை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து போனது.

இதனால், ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளது. பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததால் நாளை முதல் மார்ச் 31 வரை இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களின் முன்பதிவு கட்டணம் எவ்வித அபராதமின்றி திரும்ப தரப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.