கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் உள்ள 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

சீனாவில் முடக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. நம் நாட்டிலும் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அவர்கள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் நொய்டாவில் உள்ள ஸ்ரீராம் மில்லினியம் என்ற பள்ளியில் படிக்கும் 2 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து, கவுதம் புத் நகர் தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பார்கவாவின் அறிவுரையின்படி அந்த பள்ளி நிர்வாகம் மார்ச் 10ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது. அதேசமயம் வசந்த் விஹாரில் உள்ள தி ஸ்ரீ ராம் பள்ளி இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் குர்கானில் உள்ள தனது அரவலி மற்றும் மௌல்சாரி பள்ளிகளுக்கும் மார்ச் 9ம் தேதி முதல் விடுமுறை  அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ரெகுலர் மற்றும் இ-விசாக்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், விசா பெற்றும் இதுவரை வராதவர்களை வர வேண்டாம் என்றும், கட்டாயம் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இருந்தால் புதிதாக விசாவுக்கு விண்ணபிக்கும்படி அந்நாட்டவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.