உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் 3000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 90,927 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,872 பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மிக அதிகபட்சமாக 4,987 பேர் பாதிக்கப்பட்டு 120 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 90 ஆயிரத்தைக் கடந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் தற்போது 53,946 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் அனைத்தும் மாநிலங்களில் இருந்தும்  34,109 மக்கள் கொரோனா நோயில் இருந்து பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 30,706 பேர் பாதிக்கப்பட்டு 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 10,988 பேர் பாதிப்படைந்திருக்கும் நிலையில் 625 பேர் மரணமடந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மொத்தமாக 10,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். அதே போல டெல்லியில் 9,333 பேரும், ராஜஸ்தானில் 4,960 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாட்டில் அமலில் இருக்கும் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. நாளை முதல் மாறுபட்ட கோணத்தில் ஊரடங்கு நடைமுறைகள் இருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகக் கூடும்.