உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு 1024 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 27 எட்டியுள்ளது .இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கர்நாடகத்தில் 76 பேரும், தெலுங்கானாவில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 65 பேரும், குஜராத்தில் 58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 86 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

 

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் எட்டு பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக நேற்று 10 மாத குழந்தை ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.