வாரணாசியில் உள்ள தனியார் பள்ளியில் காலை வகுப்புகள் கொரோனா வகுப்புடன் தொடங்குகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் மாணவர்களுக்கு அந்த பள்ளியின் ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கின்றனர்.

சீனாவை மட்டும் பதம் பார்த்து வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வாரணாசியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அது தொடர்பான தவறான தகவல்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை புதுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அந்த தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு காலை நேர வகுப்புகள் கொரோனா வகுப்புடன் தொடங்குகிறது. இந்த வகுப்பில், கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள், எப்படி பரவுகிறது போன்ற தகவல்களை தெரிவித்து மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த வைரஸ் பரவமால் தடுக்க  செய்ய கூடாத செயல்கள் (கரோ நோ) குறித்த பட்டியலையும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் கட்டி பிடிப்பது, உணவுகளை பகிர்வது, மற்றவர்களின் டவல்கள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது போன்றவை செய்ய கூடாது போன்றவை அந்த கரோ நோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

 மேலும் மாணவர்கள் தங்களுக்கு உடல் நலகுறைவு இருப்பது தெரிந்தால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தனியார் பள்ளியின் ஆசிரியை ஜெயஸ்ரீ குப்தா இது குறித்து கூறுகையில், கொரோனா வகுப்பை கடந்த சனிக்கிழமை முதல் நடத்தி வருகிறோம். இந்த வகுப்பில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் இந்த வைரஸ் வராமல் தடுக்க செய்ய கூடாத செயல்கள் குறித்த தகவல்களையும் மாணவர்களுக்கு தெரிவிக்கிறோம். வாரணாசி ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது அதனால் உள்ளூர்வாசிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம். அதனால் இந்த பிரச்சினை தொடர்பாக குழந்தைகளுக்கு கற்று கொடுக்க முடிவு செய்தோம். இதன் மூலம் அவர்கள் பெற்றோர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க முடியும்.