உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 24,506 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 775 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 57 பேர் பலியாகி உள்ளனர்.

ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 5,063 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 6,817 பேர் பாதிக்கப்பட்டு 301 பலியாகியுள்ளனர். அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 2,815 பேர் பாதிக்கப்பட்டு 127 உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 53 பேர் மரணடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,775 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தெறிக்கவிடும் திருநெல்வேலி..! 63ல் 57 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம்..!

கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த போதும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் நாட்டில் சமூக பரவல் ஏற்படவில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். அதன்படி வருகிற மே3ம் தேதி வரையில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.