Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகீர்!

கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

Conspiracy in Singapore to topple the Karnataka government says dk shivakumar
Author
First Published Jul 25, 2023, 2:20 PM IST

கர்நாடக மாநிலத்தை பெரும்பான்மை பலத்தோடு ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறி, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “சிங்கப்பூரில் அமர்ந்து பெரும்பான்மை காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கான திட்டம் வகுக்கப்படுகிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் சிங்கப்பூரில் அமர்ந்து இதற்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர். பெங்களூருவுக்கு பதிலாக சதித் திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த முறை சிங்கப்பூரை தேர்ந்தெடுத்துள்ளனர்.” என்றார்.

மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமியை குறிப்பிட்டு, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 “இது எல்லாம் ஒரு உத்தி. இதைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். பெங்களூரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது வெளிவரும் என்று சந்தேகிக்கப்படுவதால், சிங்கப்பூரில் இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டத்தை நான் நன்கு அறிவேன். என்ன நடக்கிறது என்பது எனக்கும் தெரியும்.” என்றும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்திலும்கூட, சிங்கப்பூர் கூட்டம் தொடர்பாக டி.கே.சிவக்குமார் பேசினார். அந்த கூட்டத்தில், வேறு சில கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நாளும்கூட, இதுகுறித்து இரண்டு முறை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, பெங்களூரு செய்தியாளர் சந்திப்பிலும் இந்த தகவலை டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “சில பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கிறார்கள். எதிரிகள் நண்பர்களாகிறார்கள். இந்த தகவலைத்தான் என்னால் சேகரிக்க முடிந்தது. அவர்கள் பெங்களூரிலும் டெல்லியிலும் ஒரு கூட்டம் நடத்த விரும்பினர், ஆனால் முடியவில்லை. எனவே, சிங்கபூருக்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியாக, நாம் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.” என்றார்.

மணிப்பூர் விவகாரம்: விதி எண் 267 மற்றும் 176 என்ன வித்தியாசம்?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெருமான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 85 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.கே.சிவக்குமாரின் கருத்தை பாஜக மறுத்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத்தின் கருத்தை திசைதிருப்பவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அக்கட்சி முன்வைப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. “காங்கிரஸ் அரசை வீழ்த்த வெளியில் இருந்து யாரும் வரத்தேவையில்லை; அவர்கள் கட்சிக்குள்ளேயே இருப்பவர்களால் காங்கிரஸ் அரசு வீழும்.” என முன்னாள் உள்துறை அமைச்சர் அரஜ ஜனனேந்திரா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றிருக்கும் குமாரசாமி, அண்மையில் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாகவே, காங்கிரஸ் அரசை வீழ்த்த சிங்கப்பூரில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஆனால், கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல், பாஜகவுக்கு தாவிய சில எம்.எல்.ஏ.க்களால் அக்கூட்டணி ஆட்சியை இழந்தது. இதனால், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது, பாஜகவின் ஆப்பரேஷன் லோட்டஸ் மூலம் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்று பெற்று ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios