connect the adar number with pan card

வருமானவரி செலுத்துவோர் பான் கார்டு எண்ணுடன், தங்களின் ஆதார் எண்ணையும் இணைப்பது ஜூலை 1-ந் தேதி முதல் கட்டாயம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக நேற்று அறிவித்துள்ளது. 

வருமானவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, வருமானவரி செலுத்துபவர்கள், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுடன், 12 இலக்க ஆதார் எண்ணையும் இணைத்து இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் அறிவிப்பு

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக ஒருவரே பல பான் கார்டுகள் வைத்துள்ளார். ஆதலால், வரி ஏய்ப்பைத் தடுக்க ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்று நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இவ்வாறு இணைப்பதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என்றார். 

உச்ச நீதிமன்றம் உறுதி

இந்த உத்தரவுக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் அரசின் உத்தரவை உறுதி செய்தது. அதே சமயம், தனிநபர் உரிமையை பறிக்கும் செயலாக இருப்தால், இதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்தது. 

கட்டாயம்

இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வௌியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது- வருமான வரி செலத்துபவர்கள் தங்களின் வருமானவரி ரிட்டன்தாக்கலின் போது, பான் கார்டுடன், ஆதார் எண்ணையும் இணைத்து இருப்பது கட்டாயம். 

மேலும், பான் கார்டு வைத்து இருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் எண்ணை, வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏன்படி, வருமானவரித் துறை முதன்மை இயக்குநருக்கு தெரிவிப்பது கட்டாயம். பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம். இந்த உத்தரவு 2017, ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2.07 கோடிபேர்

நாட்டில் இதுவரை 25 கோடிக்கு பேர் பான் கார்டு பெற்றுள்ளனர். அதில் 2.07 கோடி வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.