'பாரத ஜனாதிபதி': ஜி20 அழைப்பிதழில் பெயர் மாற்றம்!
ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது
ஜி20 தலைமையை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு தலைப்புகளில் ஜி20 கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில், ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: போர் பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை!
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “ராஷ்டிரபதி பவன் செப்டம்பர் 9 ஆம் தேதி G20 இரவு விருந்துக்கு வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில் அழைப்பை அனுப்பியுள்ளது. மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா என்றிருக்கும் அரசியலமைப்பின் 1ஆவது பிரிவு பாரதம் என மாற்றப்பட கூடும். இது மாநிலங்களின் ஒன்றியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா, தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவை "பாரத குடியரசு" என்று பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டை பாரதம் என்று குறிப்பிடும்படி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என பெயரிட்டுள்ளது. அதுமுதலே, இந்தியாவை பாரதம் என அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.