மூன்று மாநிலங்களில் முதல்வர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி!
மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காத பாஜகவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானாவை பொறுத்தவரை அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவியேற்கவுள்ளார். மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா நாளை பதவியேற்கவுள்ளார்.
ஆனால், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வெற்றி பெற்றுள்ள பாஜக அம்மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மூன்று மாநிலங்களில் முதல்வர்களை அறிவிப்பதில் உண்மையில் தாமதம் ஏன் என அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
“டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி 24 மணி நேரத்திற்குள், தெலங்கானாவுக்கு முதலமைச்சரை நியமிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி ஊடகங்களில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.” என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், “எங்கள் முதல்வர் ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்பட்டு இன்று பதவியேற்கிறார். ஆனால், மூன்று நாட்கள் கடந்தும் கூட, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்வர்களை பாஜகவால் அறிவிக்க முடியவில்லை. உண்மையில் எதற்காக இந்த தாமதம்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் கார் மழையில் வெள்ளத்தில் மூழ்கி விட்டதா? பழைய நிலைக்கு கொண்டு வர இத செய்யுங்கள்..!