வயநாடு நிலச்சரிவு எதிரொலி : காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் 100 வீடுகள்; ராகுல் காந்தி
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்றுமுதல் நான் இங்கு இருக்கிறேன். மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. இன்று நாங்கள் பஞ்சாயத்து மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அப்போது பலி எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கக் கூடும் என்பதையும், எத்தனை வீடுகள் சேதமடைந்திருக்கும் என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.
கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் படுகொலை
நாங்கள் இங்கு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். வயநாடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக்கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. கேரளா மாநிலம் இதுபோன்று பெரிய சோகத்தை கண்டது கிடையாது. இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வரிடமும், டெல்லியிலும் பேசுவேன். இது மாறுபட்ட நிலையான சோகம், இதை வேறு விதமாகத்தான் அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.