மோடி மட்டும் போதுமே எதுக்கு 30 கட்சிகள்? மல்லிகார்ஜுன கார்கே விளாசல்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் ஜூலை 17,18 (இன்றும், நாளையும்) ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவுள்ளார். கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 கட்சிகள் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 தேர்தல்: பாஜக எப்படி தயாராகிறது? வியூகம் என்ன?
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு போட்டியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 18ஆம் தேதி (நாளை) தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள 18 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில் பாஜகவையும் சேர்த்து மொத்தம் 19 கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தங்களது பலத்தை காட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை விட பிரதமர் மோடி பலம் வாய்ந்தவராக இருந்தால், அவர் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருக்கலாமே. ஏன் 30 கட்சிகளை ஒன்று சேர்க்கின்றனர்? அக்கட்சியின் பெயர்களை முதலில் அவர்கள் வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையத்தில்கூட அக்கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால், எங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் எங்களுடனே இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று குழப்பத்தில் இருக்கும் அவர்கள், தங்கள் பலத்தை காட்ட கட்சிகளின் கோஷ்டிகளை கூட்டி வருகிறார்கள்.” என்று சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை சோதனைக்கும் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ எங்களின் முக்கியமான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு முன்பு தமிழக கல்வி அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையை கண்டிக்கிறோம். திரணியினரை மிரட்டுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் இது மோடி அரசின் யூகிக்கக்கூடிய நாடக கதையாக உள்ளது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயகத்தை மிதிக்க பயன்படுத்தப்படும் இந்த கோழைத்தனமான தந்திரோபாயங்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.” என மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.