எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம்; வளர்ச்சியடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த வடகிழக்கு கொண்டாட்டத்தில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் கைகோர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. மோடியின் உத்தரவாதத்தைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்படுகிறீர்கள். ஆனால் அது உண்மையில் எதைக் குறிக்கிறது? அருணாச்சலப் பிரதேசத்தைக் கவனியுங்கள். 2019-ம் ஆண்டில், இங்குதான் நான் சேலா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது, அது கட்டப்பட்டுள்ளதா இல்லையா? அது நிறைவடைந்துள்ளதா இல்லையா? நான் கொடுத்த உத்தரவாதத்திற்கு இது ஒரு சான்று அல்லவா? இது உறுதியான உத்தரவாதம் அல்லவா?
அதேபோல், 2019ஆம் ஆண்டில், டோன்யி போலோ விமான நிலையத்திற்கும் நான் அடிக்கல் நாட்டினேன். இன்று, இந்த விமான நிலையம் இப்போது சேவைகளை வழங்குகிறது அல்லவா? எனது முயற்சிகள் மக்களுக்காக, உங்களுக்காக மட்டுமே. மோடியின் இத்தகைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போது, ஒட்டுமொத்த வடகிழக்கும் பாராட்டுகிறது.” என்றார்.
வடகிழக்கில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதும் தமது அரசின் முன்னுரிமை என பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நமது எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, முந்தைய அரசுகள் ஊழல் மோசடிகளில் சிக்கின. அவர்கள் நமது எல்லைப் பகுதிகள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியை புறக்கணித்து, நமது தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தினர். எல்லைப்புறப் பகுதிகளை வளர்ச்சியடையாமல் வைத்திருந்தனர்.” என குற்றம் சாட்டினார்.
ஆனால், மோடி தமது நடவடிக்கைகளை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை. மாறாக தேசத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!
“எல்லைப் பகுதி கிராமங்களை கடைசி கிராமங்களாக பார்க்காமல், துடிப்பான கிராம திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். ஏறக்குறைய 125 எல்லைப்புற கிராமங்களுக்கான சாலை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பழங்குடியினரை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஜன்மன் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். மணிப்பூரில் அவர்கள் வசிக்கும் இடங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.” என பிரதமர் மோடி கூறினார்.
ஒவ்வொரு குடும்பமும் "இது மோடியின் குடும்பம்" என்று சொல்கிறார்கள். மோடியைப் பொறுத்தவரை ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் அவரது குடும்பம் போன்றதுதான். பாதுகாப்பான வீடுகள், இலவச உணவு தானியம், சுத்தமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், எரிவாயு இணைப்புகள், சுகாதாரம் மற்றும் இணைய வசதி போன்ற அத்தியாவசிய வசதிகள் ஒவ்வொரு நபரையும் அடையும் வரை மோடி ஓய்வெடுக்க மாட்டார் எனவும் பிரதமர் திட்டவட்டமாக கூறினார்.