எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சிகளை முறியடிப்பதற்காக பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் நேரடியாக குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

குஜராத்தில் வருகிற 8-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை தோற்கடிக்க பாரதிய ஜனதா கட்சி , காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டியும் பணம் கொடுத்தும் இழுக்க பா.ஜ.க. முயற்சித்து வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் குஜராத்தில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள சொகுசு வி்டுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமீபத்தில் கர்நாடக சட்டசபையை சுற்றிப்பார்த்தனர். கர்நாடக ஆளுநரையும் சந்தித்து பேசினர்.

அவர்களை அங்கு தங்கவைக்க ஏற்பாடு செய்த கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் , பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னதாக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் கூறியதாவது-

பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் நேரடியாக குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் .டெல்லிக்கு செல்லமாட்டார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நோட்டாவில் வாக்களிப்பார்கள் என பாரதிய ஜனதா கட்சி பொய்யான பிரச்சாரத்தை செய்துவருகிறது,.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். அவர்கள் அனைவரும் அகமது படேலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் .

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் எப்போது அவர்கள் குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பெங்களூருவில் 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்,. ஆனால் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றிபெற 47 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.