எல்லா மாநிலங்களிலும் கூட்டணி தேவையில்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வந்தது. காங்கிரஸுக்கு உதவியாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கினார். 

தற்போதைய நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற முக்கியமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோரை இணைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவந்தது. ஏற்கனவே இந்தக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசிய சந்திர பாயு நாயுடு, மீண்டும் இவர்களைச் சந்தித்து பேச திட்டமிட்டிருக்கிறார். 

இதற்கிடையே உ.பி.யில் மாயாவதியும் அகிலேஷும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் தொகுதிகளைச் சரிசமமாகப் பிரித்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் இக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் இக்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. இதேபோல மம்தா பானர்ஜியும் தாய்க் கட்சியுடன் கூட்டணி சேர்வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தக் கட்சிகள் முரண்டு பிடிப்பதால், காங்கிரஸ் கட்சியும் புதிய முடிவுக்கு வந்துவிட்டது. 

எல்லா மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடமால், தேவைக்கேற்ப கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு அந்தக் கட்சி வந்துவிட்டது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கிடைத்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு புது தெம்பைக் கொடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டதுபோல நாடாளுமன்றத் தேர்தலிலும் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலிடம் ஆலோசனை கூறியுள்ளார்கள். 

தேர்தலில் கணிசமாக வெற்றி கிடைத்தால், இந்தக் கட்சிகள் தங்களைத் தேடிவரும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் கூறுகிறார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 145 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சிகள் தேடிவந்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவைக் கொடுத்தன. இதேபோல 175 முதல் 200 தொகுதிகள் வரை வரப்போகிற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தேர்தலுக்கு பிறகு இந்தக் கட்சிகள் காங்கிரஸை தேடிவரும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

எனவே இனி எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவிட்ட காங்கிரஸ், உ.பி., மேற்குவங்காளம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டது. தனித்து கூடுதல் இடங்களில் போட்டியிடுதன் மூலம், கூடுதலாக வெற்றியைப் பெற முடியும் என்று அக்கட்சி கருதுகிறது. காங்கிரஸ் கணக்கு என்னவாகிறது என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடப்போகிறது.