மணிப்பூர் களத்தில் ராகுல் காந்தி! 2 நாள் பயணம்... வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூருக்குச் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை செல்கிறார். என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கே.சி.வேணுகோபால், "ராகுல் காந்தி ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூருக்குச் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களுடன் உரையாடுவார்" என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அதிகரிக்கும் போதை ஊசி பயன்பாடு! எச்சரிக்கும் மருத்துவர் அப்துல் மஜீத்
"மணிப்பூர் சுமார் இரண்டு மாதங்களாக எரிந்துகொண்டிருக்கிறது. சமூகம் மோதலில் இருந்து அமைதிக்கு செல்ல ஒரு குணப்படுத்தும் தொடுகை தேவை." என்று கூறியுள்ள அவர், மனிதநேயத்திற்காக அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது பல எதிர்க்கட்சிகள் வடகிழக்கு மாநிலத்திற்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரின. ஆனால் மத்திய அரசு அதற்கு உறுதி அளிக்கவில்லை.
கொந்தளிப்பான சூழ்நிலையில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஒவ்வொரு நடவடிக்கையும் உரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதே நேரத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து தரப்பினரின் உதவியையும் நாடுவதாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமித் ஷா கூறினார். மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு கைவிடவில்லை என்றும் தெரிவித்தார்.
மே 3 அன்று மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 120 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன.
50 நாட்களுக்கு மேல் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையிலும் மணிப்பூர் நிலவரம் குறித்து நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ஒரு வார்த்தைகூட கூறவில்லை என அந்த மாநில மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடந்த மாதம் ஒலிபரப்பான பிரதமரின் மன் கீ பாத் வானொலி உரையைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள் பிரதமர் பேசத் தொடங்கியதும் ரேடியோ பெட்டிகளை உடைத்தும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!