திடீரென சரிந்த மேடை: கூலாக டீல் செய்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசார மேடை திடீரென சரிந்தது அங்கிருந்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்ட நிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இறுதிகட்ட தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பாலிகஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அவருடன் ஆர்.ஜே.டி. தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மிசா பார்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்தியின் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேடை சரிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், மேடை சரிந்த போது மிசா பார்தி ராகுல் காந்தியின் கையைப் பிடித்தபடி காணப்படுகிறார். அங்கிருந்தவர்கள் அனைவரும் பதற்றத்துடன் காணப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ராகுலின் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறுமாறு அவரை கேட்டுக் கொண்டனர். ஆனால், சற்றும் பதற்றம் கொள்ளாத ராகுல், நிலைமையை கூலாக கையாண்டு அவர்களை சமாதானப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்தார்.
பீகாரில் அடுத்தடுத்த தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு வலுவான ஆதரவு அலையை மேற்கோள் காட்டி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று கூறினார்,
பாலியல் வன்கொடுமை வழக்கு: மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா; 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜர்!
பீகார் மாநிலம் பாலிகஞ்சில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, பரமாத்மாதான் (கடவுள்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை நரேந்திர மோடி கூறி இருப்பதற்கு காரணம் இருக்கிறது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறை எழுப்பும் கேள்விக்கு பரமாத்மாவை காரணம் காட்டவே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்றும் கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.