ஒரே நாடு ஒரே தேர்தல்: குழுவில் இருந்து விலகிய காங்கிரஸ்!
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகவும், சட்ட செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வில் பங்கேற்பதா இல்லையா என்பதை இந்தியா கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கலந்தாலோசித்து முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அக்குழுவில் இடம்பெற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சானாதனத்தை ஒழிக்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு - உதயநிதி பதிலடி!
இதுகுறித்த கடிதத்தை அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளார். “கமிட்டியின் முடிவுகளுக்கு அப்படியே ஒப்புதல் அளிக்கும் வகையில் விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ள குழுவில் பணியாற்ற மறுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவாக இருப்பதால் அச்சமடைகிறேன்.” அக்கடிதத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அமைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சாடியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழு உடனடியாக செயல்படத் தொடங்கும் என்றும், விரைவில் தனது பரிந்துரைகளை வழங்கும் எனவும் மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது. ஆனால் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்தக் குழு அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் பிற சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதையும் ஆய்வு செய்து இக்குழு பரிந்துரைக்கவுள்ளது.