இந்தியாவின் ஆளுங்கட்சியான பாஜகவின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி,  அதைப் பற்றி கிண்டல் செய்ததோடு அல்லாமல், எந்த உதவிக்கும் எங்களை அழையுங்கள் என்று மரண கலாய் செய்திருக்கிறது.
பாஜகவின் இணையதளத்துக்கு நேற்று முன் தினம் சென்ற பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தார்கள். பாஜக இணையதளத்தில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த விஷயம் பாஜக மேல் மட்டத்தின் கவனத்துக்கு சென்றபோது, வாசகங்களைப் பார்த்து கோபத்தில் கண்கள் சிவந்தன. பாஜக அட்மினை அழைத்து விசாரித்தபோதுதான், இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கும் விவகாரம் தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லி போலீஸில் உடனடியாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து தங்களது கருத்தைப் பதிவிட்டுள்ளது. அதில், “பாஜக இணையதளம் நீண்ட நேரமாக செயல்படாததை அறிந்தோம். இந்த விஷயத்தில், ஏதாவது உதவி உங்களுக்குத் தேவையா? தேவைப்பட்டால் கேளுங்கள்; தாராளமாக உதவி செய்யத் தயாராக உள்ளோம். உங்களுக்கு உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு உதவி அளிப்பது தொடர்பான காங்கிரஸ் ட்விட்டரைப் பார்த்து பலரும் குழம்பிபோனார்கள். பிறகுதான் பாஜகவை கேலி செய்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது என்பது தெரியவந்தது.
மறைமுகமாக கிண்டல் செய்வது சரிதான்.. அதற்காக இப்படியா?