நான்கு மடங்கு அதிக விலைக்கு இந்தியா - அமெரிக்கா ட்ரோன் ஒப்பந்தம்? காங்கிரஸ் கேள்வி!
இந்தியா - அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது
இந்தியா - அமெரிக்கா ட்ரோன் கொள்முதல் குறித்து முடிவு செய்ய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஏன் கூட்டப்படவில்லை எனவும், இந்த ட்ரோன்களுக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். அவரது பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டன. அந்த வகையில், MQ-9B பிரிடேட்டர் UAV ட்ரோன்களை வாங்க அமெரிக்காவுடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மொத்தம் 31 ட்ரோன்களை கொள்முதல் செய்யும் இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், மற்றவர்களை விட இந்த ட்ரோன்களுக்கு ஏன் நான்கு மடங்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “அமெரிக்க அரசு முறை பயணத்தின் போது, 31 பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் என்ன நடந்ததோ அதேபோல் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்திலும் மீண்டும் நிகழ்ந்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம்.” என்றார்.
பிரிடேட்டர் ட்ரோன்களின் விலை குறித்து கேள்வி எழுப்பிய பவன் கேரா, “மற்ற நாடுகள் நான்கு மடங்குக்கும் குறைவான விலையில் இந்த ட்ரோன்களை வாங்குகிறது. ஆனால், 3 பில்லியன் டாலர் விலையில் 31 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா வாங்குகிறது.” என்றார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்களுக்கு இதுதொடர்பான பதில்கள் தேவை என்ற பவன் கேரா, ருஸ்டோம் மற்றும் கட்டக் சீரிஸ் ட்ரோன்களுக்காக ரூ.1500 கோடியை டிஆர்டிஓ-விற்கு ஒதுக்கிய பிறகு, காலாவதியான தொழில்நுட்பம் கொண்ட இந்த ட்ரோன்கள் நான்கு மடங்கு அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன என்றார்.
நிலவுக்குச் செல்லும் சந்திரயான் 3! ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ அறிவிப்பு
எஃப்-414 ஜெட் என்ஜின்களை ஹெச்ஏஎல் உடன் இணைந்து 100 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான எந்த அமைச்சரவை குழுவும் அனுமதி வழங்காதது ஏன் எனவும், 3 பில்லியன் டாலர் ட்ரோன் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அனுமதி வழங்காதது ஏன் எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா ட்ரோன் கொள்முதல் குறித்து முடிவு செய்ய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஏன் கூட்டப்படவில்லை எனவும், இந்த ட்ரோன்களுக்கு ஏன் அதிக விலை கொடுக்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு (IAF) அதிக விலையில் சிக்கல்கள் இருக்கும்போது, அமெரிக்காவுடனான ட்ரோன் ஒப்பந்தத்திற்கு என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியுள்ள பவன் கேரா, இந்திய விமானப்படைக்கு 18 ஆளில்லா விமானங்கள் தேவைப்படும் போது 31 ட்ரோன்கள் வாங்க ஏன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்ரோன் ஒப்பந்தத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மோடி அரசு தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதில் பெயர் பெற்றுள்ளது என்றும் சாடினார்.