Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவை கலக்கிய சசிகாந்த் செந்தில்: அடுத்த டார்கெட் ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநில தேர்தல் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது

Congress appoints election observer for poll bound states Sasikanth senthil for Rajasthan
Author
First Published Aug 1, 2023, 10:34 AM IST

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்துக்கு மூத்த தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரியும், தேர்தல் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மூத்த தேர்தல் பார்வையாளராகவும், சந்திரகாந்த் ஹண்டோர் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ப்ரீத்தம் சிங் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மூத்த தேர்தல் பார்வையாளராகவும் மீனாட்சி நடராஜன் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்துக்கு மூத்த தேர்தல் பார்வையாளராக தீபா தாஸ்முன்ஷியும், தேர்தல் பார்வையாளராக சிறிவெல்ல பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மிசோரம் மாநில தேர்தல் பார்வையாளராக சச்சின் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் வரவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆட்சியில் உள்ளது. அம்மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் பாஜகவும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளது. மிசோரமில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில்  தமிழகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை: தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. அந்த மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க உதவியதில் சசிகாந்த் செந்திலின் பங்கு அளப்பரியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர், காங்கிரஸ் மேலிட உத்தரவையடுத்து கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை திறம்பட செய்து முடித்தவர்.

அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அதன் மூளையாக செயல்பட்டவரும் சசிகாந்த் செந்திலே என கூறப்படுகிறது. மேலும், துடிப்பான இளைஞர்களுடன் வார் ரூம் ஒன்றையும் ஆரம்பித்து கர்நாடகாவை காங்கிரஸ் கையில் கொடுத்தார்.

இந்த வெற்றியின் பின்னால், அவரை ராஜஸ்தான் மாநில தேர்தலுக்காக தற்போது காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்துள்ளது. ஏற்கனவே, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதற்கு அண்மையில்தான் அக்கட்சி முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், உட்கட்சி பூசல், பாஜக கையில் எடுத்துள்ள ராஜஸ்தான் சட்ட-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகளால் அங்கு பணிபுரிவது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டனான தருணத்தில் சசிகாந்த் செந்திலை தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios