கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்தியாவில் எப்போதோ சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொய்யான தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது என நிபுணர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் புதிய வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,195 ஆக உள்ளது. ஆகையால், இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்ற ஐயம் அனைவரும் மத்தியிலும் எழுந்தது. ஆனால், இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் பால்ராம் பராக்வா திட்டவட்டமாக மறுத்து இருந்தார். அதில், நாட்டில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைவாகதான் உள்ளது. இன்னும் அது சமூக பரவல் கட்டத்துக்கு செல்லவில்லை என்றார்.

இதுதொடர்பாக தொற்று நோயியல், பொது மருத்துவம், மருந்தகத் துறை நிபுணர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.சி.மிஸ்ரா, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், பொதுமக்கள் அதிக அளவு வெளியே சென்று வந்ததாலும் தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத பகுதிகளிலும்கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவல் ஏற்பட்டதை அரசு தாமாக முன்வந்து ஒப்புக்கொள்வதற்கான தகுந்த நேரம் இது. அப்போதுதான் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், அதே நேரம் தங்களுக்கு வராது என்ற மனநிறைவுடனும் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

இதேபோல், பிரபல வைரஸ் நிபுணர் ஷாகித் ஜமீல் கூறுயைில், இந்தியாவில் சமூகப் பரவல் நிலை வெகு காலத்துக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார். “எனினும் அதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஐசிஎம்ஆர் கொடுத்த தரவுகள்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 சதவிகிதம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களோ இல்லை என்று கூறுகிறது. இது சமூகப் பரவல் இல்லாமல் வேறு என்ன? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த் குமார்: ஐசிஎம்ஆரின் அறிக்கையை ஏற்றுக் கொண்டாலும், டெல்லி, அகமதாபாத், மும்பை போன்ற நகரங்களில் சமூக பரவல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. நிதி ஆயோக் உறுப்பினர் விகே.பால்: இந்த ஆய்வு அறிக்கை, ஏப்ரல் மாத நிலவரத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. செரோ ஆய்வு மே 3வது வாரத்தில் நடத்தப்பட்டது. நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு உருவாக 15 நாட்களாகும், எனவே, இந்த சோதனை நடத்தப்பட்ட போது பலருக்கு ஆரம்ப நிலையில் கூட தொற்று இருந்து இருக்கலாம்.

பரிதாபாத் தனியார் மருத்துவமனை நுரையீரல் துறை தலைவர் ரவி ஷேகர் ஜா: நாட்டில் கண்டிப்பாக கொரோனா நோய் தொற்று சமூக பரவல் உருவாகி இருப்பதை நான் உணர்கிறேன். கடந்த 10 நாட்களாக அரசுகள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை நிறுத்தியுள்ளது. சமூக பரவல் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனால், சமூக தொற்று ஏற்பட்டும் அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறைப்பதாகவும் கூறப்படுகிறது.