2018 சட்டப்பேரவை தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தலாக இருக்கும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரு  சாமுண்டீஸ்வரி தொகுதிதான் எனக்கு மறுவாழ்வளித்த தொகுதி ஆகும். இத்தொகுதியில்  நான் போட்டியிட வேண்டும் என இத்தொகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த  தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகவும் உள்ளது.

ஆனால்,  காங்கிரஸ் மேலிடம் எந்த  தொகுதியில் போட்டியிட வேண்டும் என  உத்தரவிடுகிறதோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன். வரும் 2018 சட்டப்பேரவை  தேர்தல்தான் நான்  போட்டியிடும் கடைசி தேர்தலாக இருக்கும் என்று உருக்கமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க,  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில்  உயர்நிலை குழு  அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அறிக்கை சமர்பித்ததும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.